அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? டிரம்ப்- ஜோ பிடன் இடையே கடும் இழுபறி

அமெரிக்க அதிபர் தேர்தலில், சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதால், முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் – ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதாக டிரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது; அதை தொடந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.பல்வேறு மாநிலங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடெனும் கடுமையான போட்டி இருந்தது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி, தற்போதைய அதிபர் டிரம்ப் அலாஸ்கா, ஆர்கன்சாஸ், கன்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிசிசிப்பி, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, ஓக்லஹோமா, தெற்கு டகோட்டா, டென்னசி, மேற்கு வர்ஜீனியா, வயோமிங், இந்தியானா, தென் கரோலினா மற்றும் உட்டாவை வென்றுள்ளார்.

மறுபுறம், கலிபோர்னியா, கொலராடோ, கொலம்பியா, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், ஒரேகான், ரோட் தீவு, வெர்மான்ட், வர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் ஆகியவற்றை பிடென் கைப்பற்றியுள்ளார்.

பிடென் மற்றும் டிரம்ப் இருவருமே கிட்டத்தட்ட சம நிலையில் உள்ளார்கள். மொத்தமுள்ள 538 இடங்களில் ஜோ பைடன்-237 இடங்களிலும், டிரம்ப்-210 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள்னர். பெரும்பான்மை 270 இடங்கள் தேவை என்ற நிலையில், சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இன்று பிற்பகல் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “தேர்தலில் மோசடி நடந்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்குச் செல்வோம். அனைவரும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். என்னைப் பொருத்தவரை, நாங்கள் ஏற்கனவே வென்றுள்ளோம்” என்றார்.

டிரம்பிற்கு பதிலளித்துள்ள ஜோ பிடென், “வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் கூறுவது ஆபத்தான, தவறான வாதம்” என்றார். “டிரம்ப் அவ்வாறு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முயன்றால் எங்களது சட்ட வல்லுநர்கள் அதைத் தடுத்து நிறுத்துவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை அதிபர் தேர்தலில் இருவருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையானது, அதிக ஓட்டுக்களை வாங்கிய முதல் மூன்று அதிபர் வேட்பாளர்களிலிருந்து ஒருவரை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கும். இதில் ஒவ்வொரு மாகாணத்துக்கு ஒவ்வொரு வாக்கு அளிக்கப்படும். இதன் மூலம் 50 மாகாணங்களில் 26 மாகாணங்களில் வென்றவர் அதிபராவார்.

Translate »
error: Content is protected !!