மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத் திட்டத்தில் இருந்து, அருந்ததிராய் குறித்த பாடம் நீக்கப்பட்டதற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத் திட்டத்தில், மூன்றாண்டுகளாக எழுத்தாளர் அருந்ததிராயின் Walking With The Comrade என்ற புத்தகம் இடம் பெற்றிருந்தது, தற்போது திடீரென்று நீக்கப்பட்டுள்ளதாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா கட்சி சார்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏ.பி.வி.பி) நிர்ப்பந்தத்தின் காரணமாகவே சர்வதேச புக்கர் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக உயர் கல்வித்துறை, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள நிலையில் ஒரு மாணவ அமைப்பின் எதிர்ப்புக்கு அடிபணிந்து புத்தகத்தை நீக்கியிருப்பது அரசின் இயலாமையைக் காட்டுகிறது.
கல்வித்துறையை காவித்துறையாக்கும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். வியூகத்தின்படி தொடர்ந்து செயல்பட்டுவரும் பா.ஜ.க. மற்றும் அதன் மாணவர் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் அடாவடிப் போக்கிற்கு அடிபணியாமல் அருந்ததிராயின் புத்தகம் மீண்டும் அதே பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்வதாக, அவர் தெரிவித்துள்ளார்.