சென்னை,
திமுகவில் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இணைய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் அவற்றில் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது காங்கிரஸ்.
பாதிக்கு பாதிக் கூட வெற்றி பெறாததால் பெரும் அதிருப்தியில் திமுக இருந்ததாம். எனினும் ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணியை எக்ஸ்ட்ரா லக்கேஜாக காங்கிரஸ் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ராகுல் காந்தியின் தமிழக வருகையால் காங்கிரஸுக்கு செல்வாக்கு கூடியுள்ளதாக அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அத்துடன் இது தொகுதி எண்ணிக்கையை அதிகரித்து கேட்க உதவும் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்களாம். இதனால் இந்த தேர்தலில் 30 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறதாம். ஆனால் திமுகவோ 20 முதல் 25 தொகுதிகள் வரை மட்டுமே கொடுப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து தினேஷ் குண்டுராவ் ராகுல் காந்தியுடன் டெல்லி சென்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது 30 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக கூட்டணியில் பெற வேண்டும் என ராகுல் காந்தி கறாராக சொல்லிவிட்டாராம். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி திமுகவின் தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினர்களுடனும் ஸ்டாலினுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
ஒரு வேளை பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடப்படாவிட்டால் அடுத்து என்ன செய்யலாம் என்ற திட்டத்தையும் கே எஸ் அழகிரி வைத்துள்ளாராம். ஒரு கட்சியில் கொடுக்கப்படும் தொகுதி எண்ணிக்கை என்பது கவுரவப் பிரச்சினை, அந்த கவுரவத்தை விட்டுவிட்டு குறைந்த எண்ணிக்கையிலான சீட்டுகளுக்கு காங்கிரஸ் ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. ஏற்கெனவே பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கொஞ்ச நஞ்ச மரியாதையும் காக்க திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறதாம்.
இத்தனை தூரம் பேசியும் காங்கிரஸ் கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இணைய அழகிரி முடிவெடுத்துள்ளராம். டெல்லி சென்ற தினேஷ் குண்டுராவ், ஸ்டாலினுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு பின்னர் தங்கள் முடிவை காங்கிரஸ் அறிவிக்கும் என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மு.க. அழகிரியையே ஆஃப் செய்த எங்கள் தலைவருக்கு கே எஸ் அழகிரியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்கிறார்கள் அறிவாலயத்தினர்!