ஆபாசம் தூண்டும் விளம்பரங்கள்… இடைக்கால தடைவிதித்தது ஐகோர்ட்!

ஆபாசத்தை தூண்டக்கூடிய உள்ளாடைகள், கருத்தடை சாதனங்கள், சோப் விளம்பரங்களுக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள், சோப் உள்ளிட்ட அழகு சாதனப்பொருட்கள், அத்துடன் பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவ ஆலோசனை போன்றவற்றின் விளம்பரங்கள் ஆபாசத்தை தூண்டுவதாக உள்ளதாகக்கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த இந்த பொதுநலவழக்கில், இத்தகைய விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

தணிக்கை இல்லாத இத்தகைய விளம்பரங்களால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதோடு, பல இளம்பருவத்தினர் குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு, இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் ஆபாசத்தைப் பரப்பும் வகையில் இருந்தால் அவற்றை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Translate »
error: Content is protected !!