ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 1.50 கோடி நிலத்தை அபகரித்த இருவர் கைது

சென்னை,

ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 1.50 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கிண்டி, தெற்கு மாடவீதி, திருநகர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘கடந்த 1973ம் ஆண்டு கணபதி சின்டிகேட் என்னும் கம்பெனியின் பங்குதாரரும், பவர் பெற்றவருமான விஜயகுமாரிடம் இருந்து  சோளிங்கநல்லூர் பகுதியில் 3,480 சதுரடி கொண்ட காலி நிலத்தை வாங்கினேன்.

இந்நிலையில் அந்த இடத்தை விற்பனை செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச்சான்று போட்டு பார்த்ததில் என்னைப்போல வேறொரு நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரகுராமன் என்பவருக்கு பொது அதிகார பத்திரம் பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

மேலும் அந்த நிலத்தை ரகுராமன் சந்தோஷ் கோபால் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். எனது நிலத்தை  திட்டம் போட்டு அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

அது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணைக்கமினர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் விசாரணை நடத்தினர். இதில் இடத்தின் உரிமையாளர் சுப்பிரமணியனைப் போல ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு நடந்தது உண்மை என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து நிலமோசடியில் ஈடுபட்ட ரகுராமன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!