இந்தியா ராணுவத் தாக்குதல் நடத்தும் என பயந்துபோய் தான், விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்ததாக, அந்த நாட்டு எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு பிப்ரவரி 16ம் தேதி ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடிகுண்டு நிரம்பிய எஸ்யூவி கார் மோதி வெடித்ததில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றது.
இதை தொடர்ந்து, 26 பிப்ரவரி 2019 அன்று இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் பால்கோட்டில் இருந்த பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தன. அப்போது, பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டிச் சென்று வீழ்த்திய போது, இந்திய விமானப்படை போர் விமானி அபிநந்தன், பாகிஸ்தான் பிடியில் சிக்கிக் கொண்டார்.
விமானி அபிநந்தனை விடுவிக்குமாறு இந்தியா வலியுறுத்தியது; பல்வேறு உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், மார்ச் 1ஆம் தேதி அட்டாரி வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- என் தலைவர் அயாஸ் சாதிக் எம்.பி பேசுகையில், அபிநந்தன் விவகாரம் பற்றிய புதிய தகவல் ஒன்றை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது: அபிநந்தன் பிடிபட்டதும் உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்தது. அப்போது வந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, அபிநந்தனை விடுவிக்காவிட்டால் பிப்ரவரி 27 அன்று இரவு 9 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் என்று, பாகிஸ்தான் நாடாளுமன்ற தலைவர்களிடம்கூறினார்.
இக்கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். அந்த நேரத்தில் அங்கு வந்த ராணுவ தலைமை ஜெனரல் ஜாவத் பாஜ்வா, இந்தியாவின் தாக்குதல் திட்டம் பற்றி குறிப்பிட்டதும் வியர்த்துப் போயிருந்தார், அவரது கால்கள் நடுங்கின. இந்தியா தாக்குதல் நடத்தும் என்பதால் அபிநந்தனை போக விடுங்கள் என்று குரேஷிக் கேட்டுக்கொண்டார். இவ்வாறு, அயாஸ் சாதிக் எம்.பி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் எம்.பி. ஒருவரின் இந்த வெளிப்படையான பேச்சு அந்த நாட்டுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.