இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி பொய்யான வாக்குறுதி அளித்துள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார்.
சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகாரில் தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்பட்டது. அதில், பாஜக வெற்றி பெற்றால் பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இலவச கொரோனா தடுப்பூசி என்ற இந்த அறிவிப்பையும் தனக்கே உரித்தான பாணியில் கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று நோயை அணுகும் உத்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பதை பொதுமக்கள் அறிய, அவர்களது மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள். பாஜக அளித்துள்ள பொய்யான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.