ஏடிஎம்மில் முதியவர்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை அபேஸ் செய்த பலே கில்லாடி கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வங்கியின் ஏஎடிம் மையத்திற்கு வரும் முதியோர்களிடம் உதவி செய்வதாக கூறி கவனத்தை திசை திருப்பி பணத்தை அபகரித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை, விருகம்பாக்கம், நடேசன் நகர், துரையரசன் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சதாசிவம் (வயது 81). கடந்த 1ம் தேதியன்று காலை 10.15 மணியளவில் விருகம்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்டே பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம்முக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு நபர் சதாசிவத்திடம் உதவி செய்வதாக கூறி, சதாசிவத்தின் ஏடிஎம் கார்டை பெற்று இயந்திரத்தில் பொறுத்தி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். பின்னர் பணம் வரவில்லை எனக்கூறி ஏடிஎம் கார்டை சதாசிவத்திடம் கொடுத்துவிட்டுச் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்த போது, சதாசிவம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் ரூ. 60 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சதாசிவம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சதாசிவத்திடம் உதவி செய்வதாக வந்த நபரின் அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதனையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சதாசிவத்தின் பணத்தை அபகரித்த நபர் சென்னை வளசரவாக்கம், ஸ்ரீலட்சுமி நகரைச் சேர்ந்த

இளையராஜா (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.60 ஆயிரம் பணத்தை மீட்டனர். விசாரணையில் சதாசிவத்திடம் உதவி செய்வதாகக் கூறிய இளையராஜா ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் பொருத்தி முயற்சி செய்வது போல நடித்து, பின் நம்பர் மற்றும் ஓடிபி எண்ணை தெரிந்து கொண்டு பணம் வரவில்லை எனக் கூறியுள்ளார்.

பின்னர் மற்றொரு போலி ஏடிஎம் கார்டை சதாசிவத்திடம் கொடுத்துச் சென்று விட்டு, மற்றொரு ஏடிஎம்முக்கு சென்று அந்த கார்டை பயன்படுத்தி ரூ. 60 ஆயிரத்தை எடுத்துச்சென்றுள்ளார். இதே போல வடபழனியிலும் ஒரு நபரின் ஏடிஎம் கார்டை திருடி பணத்தை இளையராஜா அபகரித்துள்ளார். சென்னை தவிர தேனி, திருச்சி, மதுரை மற்றும் பல மாவட்டங்களிலும் இதே போல வங்கி மற்றும் ஏடிஎம் மையத்திற்கு வரும் வயதானவர்களின் கவனத்தை திசை திருப்பி கைவரிசை காட்டியுள்ளதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர், கைது செய்யப்பட்ட இளையராஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!