ஓட்டல் உரிமையாளரை அதிமுக முன்னாள் கவுன்சிலர் அடியாட்களுடன் சென்று தாக்கும் காட்சிகள் சிசிடிவியில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுன்சிலர் தாக்கியதில் காயம்பட்ட வழக்கறிஞர் எழில்
சென்னை, வேளச்சேரி, நேரு நகரைச் சேர்ந்தவர் எழில். சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். சென்னை, வேளச்சேரி 100 அடி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று எழில் தனது ஓட்டல் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு அதிமுக முன்னாள் கவுன்சிலரும், பகுதிச்செயலாளருமான மூர்த்தி வந்துள்ளார். நடுரோட்டில் நின்றபடி ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டு எழிலிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மூர்த்தியுடன் வந்த நபர்கள் வழக்கறிஞர் எழிலை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவானது. இது தொடர்பாக எழில் வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மூர்த்தி மற்றும் அவரது அடியாட்கள் எழிலை தாக்கியதாக வேளச்சேரி போலீசார் எழிலுக்கு புகார் மனு ஏற்பு ரசீது கொடுத்துள்ளனர். இதற்கிடையில் வழக்கறிஞர் எழிலை மூர்த்தியின் உடன் இருந்தவர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.