அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. தனது தந்தையின் கட்சியுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய், விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் என்பதை, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.
இந்த புதிய கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள எஸ்.ஏ. சந்திரசேகர், கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக தனது பெயரையும் (எஸ்.ஏ.சி) குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் குழம்பிப் போனார்கள். கட்சி தொடங்குவது தொடர்பாக விஜயிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லையே தவித்தார்கள்.
இதற்கிடையே, எஸ்.ஏ சந்திரசேகர் கூறுகையில், “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான்தான் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. விஜய்க்கும் அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று விளக்கம் தந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தரப்பிலும் அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:
இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா், ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என்பதை ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவா் அரசியல் தொடா்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது. எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக எனது ரசிகா்கள், அதில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது.
என் பெயரையோ, புகைப்படத்தையோ, எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால், அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கும் விவகாரத்தில் நடிகர் விஜய்- அவரது தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு பகிரங்கமாக வெளிப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.