சென்னை திருவான்மியூரில் உள்ள நீதிபதி வீட்டுக்கு சென்று குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக நீதிபதி கர்ணன் உள்பட 5 பேரை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, திருவான்மியூர், கலாசேத்ரா காலனி, பார்வதி தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் தேவராஜ். கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேர், தன்னிடம் குடிபோதையில் தகராறு செய்ததாகவும் தகராறில் ஈடுபட்ட 5 பேரில் ஒருவர் தான் ஒரு நீதிபதி எனவும் அங்குள்ள ஒரு வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறி தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் காவலாளிகளை தள்ளிவிட்டு அத்து மீறி அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அந்த வீட்டின் கதவை எட்டி உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அது தொடர்பாக காவலாளி தேவராஜன் திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அது தொடர்பாக விசாரணை செய்ததில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதிக்கு சொந்தமான வீட்டில் தான் நீதிபதி கர்ணன் உள்பட 5 மர்ம நபர்களும் அத்துமீறி நுழைய முயன்றது தெரியவந்துள்ளது. அந்த வீட்டில் ஒய்வு பெற்ற நீதிபதி பானுமதியின் மகள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் 294 பி (ஆபாசமாக திட்டுதல்), 448- (வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைதல்) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், தகராறு செய்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவதூறாக பேசிய விவகாரத்தில் மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் நீதிபதி கர்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி வீட்டில் தகராறு செய்த வழக்கு திருவான்மியூர் போலீசில் இருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காரணத்தினால் மீதமுள்ள மனோகரன், விஜயரகவன், குப்பன், பிரகாஷ், ஏகாம்பரம் ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணைக்குப்பின்னர் ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.