பீஜிங்,
சீன நாட்டின் கொரோனா தடுப்பூசியை வங்கதேசம் நிராகரித்ததற்கு, சீன பத்திரிகையான குளோபல் டைம்ஸ் இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவின் சினோவாக் கொரோனாவாக் தடுப்பூசிகளுக்கான ஒப்பந்த விதிமுறைகளில் ஒன்றாக, சினோவாக் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளின் செலவை, வங்கதேசம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால், இந்த ஒப்பந்தத்தை வங்கதேசம் நிராகரித்தது.
சீன நிறுவனம் தனது தடுப்பூசியை வாங்கும் பிற நாடுகளுக்கும் இதே நிபந்தனையை விதிப்பதால், வங்கதேசத்திற்கு மட்டும் விதிவிலக்கு தர முடியாது என்று கூறியது.
இதையடுத்து சீன பரிவர்த்தனை நிபந்தனை இயல்புக்கு மாறாக, இந்தியா கடந்த வாரம் வங்கதேசத்திற்கு இரண்டு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை பரிசாக அனுப்பியது. மேலும் 30 மில்லியன் டோஸ் வர்த்தக ஒப்பந்தத்திற்கும் வழிவகுத்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் சினோவாக் தடுப்பூசி சோதனைகளை நிறுத்துவதற்கான வங்கதேசத்தின் முடிவுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக குற்றம் சாட்டிய சீன அரசாங்க ஊடகமான குளோபல் டைம்ஸ், மருத்துவ பரிசோதனைகளுக்கான செலவு பகிர்வு என்பது சாதாரணமானது என்றும், இந்தியாவின் தலையீடு காரணமாகவே சினோவாக் சலுகையை வங்கதேசம் நிராகரித்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.