சென்னை நகரில் கொரோனா தடுப்பு முழு ஊரடங்கு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் ட்ரோன் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விதிமுறை மீறுபவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் கொண்டு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் சில இடங்களில் தனி நபர்கள் தன்னிச்சையாக சுற்றுவது, குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் கூட்டமாக அமர்வது, இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவது என கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடுவதால், இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலம் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வீடியோ பதிவுகளை வைத்து பொறுப்பு அதிகாரிகளின் தகவல் பரிமாற்றம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் நேற்று மெரினா, காமராஜர் சாலை, காந்தி சிலை அருகில் சென்னை நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன், கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன், மயிலாப்பூர் துணைக்கமிஷனர் (பொறுப்பு) டி.சாம்சன் மற்றும் அதிகாரிகள் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும் பணியை பார்வையிட்டனர்.
இதில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து சென்னை நகரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் இடங்களில் காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதன் மூலம் பொதுமக்கள் அவசியமின்றி வௌியில் வந்து கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.