சைபர் குற்றங்களை தடுக்க காவல் துறையினர் நவீன தொழில்நுட்பங்களை கையாள கற்றுக் கொள்ள வேண்டும் என்று, மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல் துறையில், பொதுமக்கள் உடனான தொடர்பை மேம்படுத்த, முதல் முறையாக விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
திருச்சி சுப்ரமணியபுரம் திருமாங்கல்யம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விர்ச்சுவல் காப் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஹெச்.எம். ஜெயராம், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இசட். ஆனி விஜயா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் (பொ) மேற்பார்வையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஐ.ஜி ஜெயராம், தற்போது குற்றவாளிகள் புதுப்புது யுக்திகளை கையாண்டு, வங்கி கொள்ளை,சைபர் கிரைம் எனப்படும் தகவல் தொழில் நுட்ப குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை கண்டறியவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் காவல்துறையினர் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த விழாவில், ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என, நூற்றுக்கும் மேற்பட்ட திருச்சி சரக காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.