டிசம்பர் 8ம் தேதி பாரத் பந்த்? விவசாயிகள் சங்கம் முடிவு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 8ஆம் தேதி அகில இந்திய அளவில் பந்த் நடத்துவது குறித்து, பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லிக்கு பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான பஞ்சாப் விவசாயிகள், தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் ஒரு பகுதியினர், டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, விவசாயிகள் சங்கம் – மத்திய அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. எனினும், எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 8ஆம் தேதி அகில இந்திய அளவில் பந்த் நடத்துவது குறித்து, விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக, விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹெச்.எஸ். லாகோவால் கூறுகையில், ஏற்கெனவே எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசிடம் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அவற்றை ஏற்காதவரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்றார்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா கூறுகையில், எங்களுடைய போராட்டத்தை தற்போதைய நிலையில் இருந்து மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். மத்திய அரசு தனது 3 சட்டங்களையும் திரும்பப் பெறும்வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்,” என்றார்.

அதே நேரம், சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும், குறைபாடுகளை கூறினால் திருத்தங்களை செய்யத்தயார் என்று மத்திய அரசும், அவரவர் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். எனவே, அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தற்போது விவசாயிகள் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளனர்.

எனினும், சனிக்கிழமை அரசுடன் விவசாயிகள் சங்கங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே, பாரத் பந்த் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Translate »
error: Content is protected !!