டி.ஜி.பி. ராஜேஷ்தாசை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்க தலைவர்கள் முற்றுகை போராட்டம்

டி.ஜி.பி. ராஜேஷ்தாசை கைது செய்ய வலியுறுத்தி கோவை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, சிபிசிஐடி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், அவரை பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை செயலாளர் சுதாசுந்தர்ராமன், மாநில தலைவர் வாலன்டினா, மாநில பொதுச் செயலாளர் சுகந்தி , முன்னாள் எம்.எல். பாலபாரதி மற்றும் பிரமிலா, என்.அமிர்தம், ராதிகா உள்ளிட்ட மாதர் சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட மாதர் சங்கத்தினரை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். ஆனால், போலீஸ் தடையை மீறி ஊர்வலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மாதர் சங்கத்தினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், அலுவலகத்திற்குள் செல்ல முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, டிஜிபி ராஜேஸ்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும், கைது செய்யப்பட வேண்டும், ராஜேஸ்தாசுக்கு உதவியாக பெண் எஸ்.பியை மிரட்டிய செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். மாதர் சங்கத்தின் முற்றுகை போராட்டம் காரணமாக எஸ்பி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Translate »
error: Content is protected !!