தமிழ்மொழி மீது பாசம் காட்டுவதைப் போல் மத்திய அரசு பாசாங்கு செய்து, தமிழை சுருக்கி, சிறுமைப்படுத்தும் உள்நோக்கத்துடன் நடந்து கொள்வதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மொழிகள் ஆய்வுக்காக, மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, ‘பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா’ என்ற மத்தியப் பல்கலைக்கழகமாகப் பெயர் சூட்டி, சென்னையில் உள்ள, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைக்க, மத்திய பாஜக அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோது, சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் – பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகும் – இந்த மத்திய ஆய்வு நிறுவனம் அனைத்து வழிகளிலும், திட்டமிட்டு முடக்கப்பட்டது.
தமிழ்மொழி மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்து, ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் “துறை” என்ற அளவில் சுருக்கி, சிறுமைப்படுத்தும் உள்நோக்கத்துடன் நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது.
செம்மொழி நிறுவனத்தைக் கலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் முடிவை, முதல்வர் பழனிசாமி உடனடியாகத் தலையிட்டு கைவிடச் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.