தாராளப்பிரபு நாடகம் சகிக்கவில்லை… முதல்வரை விமர்சித்த மு.க. ஸ்டாலின்!

தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக்கொள்ள முதல்வர் பழனிச்சாமி போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிச்சாமி இன்று புதுக்கோட்டை சென்றார். ஆய்வுப்பணிகளை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

முதல்வரின் இந்த பேட்டியை விமர்சித்து, திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் காரசாரமாக பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல பழனிசாமி நினைத்துக் கொள்கிறார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதலமைச்சர், இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை!” என்று குறிப்பிட்டுள்ளார்.-

Translate »
error: Content is protected !!