கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டநிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும்வகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவதுவழக்கம்.
அதன்படி இன்று கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்திருந்தனர். இதனை திருமலை தேவஸ்தான செயல் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஐஏஎஸ் ஆகியோர் தலைமையில் எடுத்து வந்து ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், பட்டாச்சார்யர்கள் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள் யானை மீதுவைத்து கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு உள்பிரகாரங்களில் வலம்வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். பின்னர் இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதில் ஸ்ரீரங்கம் கோவில் அலுவலர்கள், திருப்பதி தேவசம்போர்டு அதிகாரிகள், அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.