திருப்பூர் அருகே பெரியாயிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாலன், அயனேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த சிறுவர்கள் இருவரும், வீட்டிற்கு அருகே உள்ள இன்னொரு சிறுவனுடன் சேர்ந்து அருகேயுள்ள தண்ணீர் தேங்கியிருக்கும் பாறைக்குழி பகுதிக்கு விளையாட சென்றனர். அப்போது பாலன், அயனேஸ்வரன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதை கண்டு பயந்து போன மற்றொரு சிறுவன், வீட்டிற்கு சென்று இரு சிறுவர்களும் நீரில் மூழ்கியதை கூறினான். அலறியடித்து கொண்டு ஓடி வந்த தாய் கஸ்தூரி பார்த்தபோது சிறுவர்களின் உடைகள் மட்டுமே இருந்துள்ளது.
இதுபற்றி அவிநாசி போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதில், நேற்று இரவு பாலனின் உடல் மீட்கப்பட்டது. இன்று சிறுவன் அயனேஸ்வரன் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பாறைக்குழி நீரில் மூழ்கி உயிரிழந்தது, திருப்பூரில் பெரும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
—