திருப்பூர் அவிநாசி அருகே புறவழிச்சாலையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில், 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் கொச்சிக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது, பெருமாநல்லூரில் இருந்து அவிநாசி நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த பைக், கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விபத்து இடத்திற்கு விரைந்து வந்த திருமுருகன்பூண்டி போலீசார், 3 பேரின் உடல்களை மீட்டு, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்த மூவரும், அவிநாசி அருகே உமையங்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் முரளி (20), பூச்சந்திரன் மகன் தங்கதுரை (23) மற்றும் தண்டபானி மகன் சுரேஷ்குமார் (23) என்று தெரிய வந்தது. திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.