தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு செல்ல இதுவரை 55ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையிலிருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை முதல் 13-ஆம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
அதன்படி, 11ம் தேதிமுதல், 13ம் தேதி வரை சென்னையில் இருந்து 9 ஆயிரத்து 510 பேருந்துகள்; பிற ஊர்களில் இருந்து 5 ஆயிரத்து 247 பேருந்துகள் என, மொத்தம் 14 ஆயிரத்து 757 பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 15ம் தேதி முதல், 18ம் தேதி வரை, மொத்தம் 16026 பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில், 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, செங்குன்றம் வழியாக கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும்; கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கே,.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும்.
திண்டிவனம் , விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம் தஞ்சை செல்லும் பேருந்துகள் அனைத்தும், தாம்பரத்தி இருந்தும், வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், ஓசூர், தருமபுரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும். திருவண்ணாமலை, நெய்வேலி, சிதம்பரம், வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்கு தாம்பரம் ரயில் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிலையத்தில் இருந்தும்; திருச்சி, மதுரை, நெல்லை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு தாம்பரம் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படும்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, இந்த நான்கு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளை முன்பதிவு செய்ய கோயம்பேட்டில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரத்தில் 2 மையங்கள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு மையம் என மொத்தம் 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருக்கழுக்குன்றம் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும்.
முன்பதிவு செய்துகொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24/7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*