வரும் சட்டசபைத் தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி ரஜினியை சந்தித்து கேட்பேன் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவரான நடிகர் கமல்ஹாசன், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த நிகழ்வின்போது, தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளராக இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். உடனடியாக அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு கமல் அளித்த பேட்டியில், “தேர்தல் பிரச்சாரத்திற்காக எல்லோரின் வீட்டுக்கும் செல்வேன்.என் நண்பரான ரஜினி வீட்டை விட்டுவிடுவேனா?
அவரது அரசியலை விட எனக்கு அவருடைய ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை என்னுடைய தொழிலைவிட அரசியலில் ஆர்வம் அதிகம். அதனால்தான் தொழிலை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு இதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ரஜினி நலமாக இருப்பதற்கு, நான் முன்னுரிமை கொடுப்பேன்.
நானும் ரஜினியும் திரையுலகில் போட்டியாளர்களாக இருந்தோமே தவிர,ஒருபோதும் பொறாமைக்காரர்களாக இருந்ததில்லை. அரசியலிலும் அது தொடரும், தொடரலாம் என்று, கமல்ஹாசன் கூறினார்.