தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏப்ரல் மாதம் 6- ஆம் தேதி நடைபெறவிருப்பதால், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், அவ்வப்போது வாகன சோதனை செய்துவரும் பறக்கும் படையினர், கணக்கில் வராத பணம், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பொருட்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தொடர்பாகப் புகார் அளிக்க தொலைப்பேசி எண்களை வருமான வரித்துறை (Incometax Department) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை இன்று (02/03/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் 1800-425-6669 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
மேலும், itcontrol.chn.@gov.in என்ற மின்னஞ்சலிலும், ஃபேக்ஸ் செய்ய 044- 28271915 என்ற எண்ணிலும், 94453-94453 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் அளிக்கலாம். பணப்பட்டுவாடா தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.