நான் மீண்டும் வருவேன், கட்சியை சரி செய்வேன்‘ என்று சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளதால், அவரது தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு, சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 70க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக இடம் பிடித்தது. அக்கட்சியின் சட்டசபை தலைவராக பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வானார்.
ஆனால், அ.தி.மு.க. தோல்வி மற்றும் அ.தி.மு.க. கட்சி பற்றி சசிகலா எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் இன்று அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த தொண்டரிடம் பேசிய சசிகலா,
‘நல்லா இருக்கீங்களா? வீட்டில் எல்லாம் நன்றாக உள்ளனரா? சீக்கிரம் வந்து விடுவேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக கட்சியை சரி செய்து விடலாம். அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். நிச்சயம் வருவேன் என்று பேசினார்,
சட்டசபை தேர்தல் முடிந்து இத்தனை நாட்களாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத சசிகலா, தான் மீண்டும் வருவேன் என்று இந்த தொலைபேசி உரையாடலில் கூறியிருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா பேசிய தொலைபேசி ஆடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.