நிவர் புயல் தமிழகத்தை நெருங்கியுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் சாலைகள் மூடப்பட்டு முடங்கிப்போயுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, அதி தீவிர புயலாக மாறியுள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தெரிகிறது. புயலை கரையை கடக்கும் போது, 155 கி.மீ., வரையில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, 2வது நாளாக பேருந்து, ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்று இரவு 7 மணியோடு மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுகிறது.
சென்னை விமான நிலையமும் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளன. சென்னையில் கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலை மூடப்பட்டது; எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையும் புயல் காரணமாக மூடப்பட்டன. இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளிமாவட்ட நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வரும் நிலையில், புயல் கரையை கடப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தாலும் இரு தினங்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள், வீட்டு மாடியில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.