பத்திரப்பதிவு செய்ய ரூ. 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், எழுத்தர் சிக்கினர்

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக செல்வம் புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தை அணுகினார். இடத்தை பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் சரவணன் மற்றும் பத்திர பதிவு எழுத்தர் செந்தில்குமார் ஆகியோர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து சார்பதிவாளர் சரவணன் மற்றும் செந்தில்குமாரிடம் பேரம்பேசி 7 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டுள்ளனர். லஞ்சம் தர மறுத்த செல்வம் அது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் தனிப்படை போலீசார் ரசாயனப்பொடி தடவிய ரூபாய் ஏழாயிரத்தை செல்வத்திடம் கொடுத்தனுப்பி விட்டு வெளியில் மாறுவேடத்தில் மறைந்திருந்தனர். அதனை செல்வம் சார்பதிவாளர் சரவணனிடம் கொடுத்துள்ளார். அதனை தனது கையில் வாங்காமல் சரவணன் பத்திரப்பதிவு எழுத்தர் செந்தில்குமாரிடம் இடம் வழங்குமாறு கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து செல்வம், செந்தில்குமாரிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார்பதிவாளர் சரவணன், எழுத்தர் செந்தில்குமார் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!