கஞ்சா வியாபாரம் செய்து பல இளைஞர்களின் வாழ்வை நாசம் செய்த கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
தேனியைச் சேர்ந்தவர் சோம முத்தையா (வயது 50). இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கோவை குட்செட் சாலையில் இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்தார். பொதுமக்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போதை தடுப்பு பிரிவு போலீசார் சோம முத்தையா வைத்திருந்த இரண்டு பைகளையும் சோதனை செய்தனர்.
அதில் 24 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதற்காக அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கோவை இன்றியமையாத பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர் வேலன்டினா கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சோம முத்தையாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக எஸ்.பி.சந்திரசேகர் ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.