வரும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோருடன் கருத்து கேட்பு கூட்டம் இன்று திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றது.
அதன்படி, திருச்சி, மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 358 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், 10 மற்றும் 12 வகுப்பு பள்ளி திறக்கலாம் அதே நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாக தெரிகிறது.
பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி திறக்கலாம் என கூறியுள்ள நிலையில், தமிழக அரசு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே நாங்கள் குழந்தைகளை அனுப்ப தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பள்ளியில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 12 -ம் வகுப்பு 62% பேர் திறக்கலாம் எனவும், பத்தாம் வகுப்பு 58% பேர் இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதேபோல், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வைரஸ் தொற்றில் இருந்து, தங்கள் குழந்தைகளை காப்பதற்கான உத்தரவாதத்தையும் அளித்தால் பள்ளிகளுக்கு அனுப்ப தயார் எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.