பிரபல பழம்பெரும் நடிகையின் 6 கோடி ரூபாய் நிலத்தை இரண்டு முறை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த நபர் கைது

சென்னை,

பிரபல பழம்பெரும் நடிகையின் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இரண்டு முறை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சிவாஜி நடித்த வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், வாணி ராணி உள்ளிட்ட ஏராளமான பழைய படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

டந்த 1970ம் ஆண்டுவாணி என்டர்பிரைசஸ்என்ற கார் பேட்டரி நிறுவனத்தை தனது கணவர் பெயரில் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்திற்காக சென்னை அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் 3 கிரவுண்ட் 1902 சதுர அடி நிலத்தை பத்மினி என்பவரிடமிருந்து நடிகை வாணிஸ்ரீ வாங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு தனது நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்டதாக   நடிகை வாணிஸ்ரீ புகார் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, அதில் தொடர்புடைய 4 பேரை 2013ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மீண்டும் அதே நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து விற்பனை செய்தது அறிந்து நடிகை வாணிஸ்ரீ அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தார். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஏற்கனவே போலி ஆவணம் மூலம் மோசடி செய்து கைதான 4 பேரில், தமீம் அன்சாரி என்பவர் மீண்டும் போலி ஆவணம் மூலம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ரூ. 6 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ய முயன்ற அமைந்தகரை ஆசாத் நகரைச் சேர்ந்த தமீம் அன்சாரி (வயது 43) என்பவரை மத்தியக்குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தமீம் அன்சாரி அதிமுகவில் அண்ணாநகர் சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகை வாணிஸ்ரீயின் ஒரே நிலத்தை, ஒரே மோசடி கும்பல் இரண்டு முறை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!