பெண் குழந்தைகளை பாதுகாக்க அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் புதிய திட்டம்

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் தங்கள் தனிப்பட்ட புகார்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் தனி அஞ்சல் அட்டையை சென்னை அடையாறு போலீஸ் துணைக்கமிஷனர் விக்ரமன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

சென்னை நகரில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். சென்னை அடையாறில், கூடுதல் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் பாபு மேற்பார்வையில் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன், பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி கானத்துார் காவல் நிலைய சரகத்தில் அதிகாரிகள், ஆளினர்களுடன் முட்டுக்காடு, கரிக்காட்டு குப்பம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் இடையே துணைக்கமிஷனர் விக்ரமன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை நேற்று வழங்கினார். மேலும் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அஞ்சல் அட்டை மூலமாக புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து காவல் நிலையம் வந்து புகார் அளிக்க முடியாத நிலையில் மற்றும் SOS என்ற பாதுகாப்புச் செயலியை பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளை தபால் மூலமாக அனுப்பும் வகையில் துணைக்கமிஷனர் அலுவலக முகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் நேற்று அறிமுகப்படுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் விக்ரமன் பேசியதாவது, ‘‘பெண் குழந்தைகள் தங்கள் புகார்களை அந்த அஞ்சல் அட்டையில் குறிப்பிட்டு அதனை அஞ்சல் பெட்டியில் போடலாம். மேலும் அது தொடர்பான புகார்கள் தன்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அளிக்கப்படும் புகார் சம்பந்தப்பட்ட தகவல்கள் முற்றிலும் ரகசியம் காக்கப்படும். இதனால் குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்க எந்த விதத்திலும் தயக்கம் காட்ட வேண்டாம்’’ என தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வந்திருந்த குழந்தைகளுக்கு Good Touch மற்றும் Bad Touch குறித்த விழிப்புணர்வை அடையாறு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா வழங்கினார். பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கியதுடன் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கு பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்களுடன் அடையாறு துணைக்கமிஷனர் முத்திரையிட்ட அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீலாங்கரை உதவிக்கமிஷனர் விஷ்வேஸ்வரய்யா மற்றும் கானத்தூர், சட்டம் ஒழுங்கு மற்றும் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், ஆளினர்கள் பங்கேற்றனர். இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டதோடு அவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அனைவருக்கும் முககவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தி கெரோனா தொற்று தடுக்க அறிவுரை வழங்கினர். புத்தாண்டு தொடக்கத்தில் காவல் துறையின் இத்தகைய புதிய முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Translate »
error: Content is protected !!