சென்னை, கண்ணகி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.
சென்னை, காரப்பாக்கம், ஸ்ரீலட்சுமி விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் சர்ஜான் ஜார்ஜ் (25). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 24ம் தேதியன்று அதிகாலை 1 மணியளவில் தான் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது வாகனம் திருடுபோயிருந்தது. இது தொடர்பாக சர்ஜான் ஜார்ஜ் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தடயங்களை வைத்து கண்ணகி நகரைச் சேர்ந்த விஜய் (19), சூர்யா (20), பிரித்திவிராஜ் (19), சேவியர் (23), பிரதீப்ராஜ் (19) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் உட்பட சுமார் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள டியூக், அப்பச்சி, பல்சர், ஸ்பெலன்டர் உள்பட 8 பைக்குகளை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் குற்றவாளிகள் கண்ணகிநகர், மயிலாப்பூர், கோட்டூர்புரம், செம்மஞ்சேரி, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதும், அஜய் என்ற குற்றவாளி மீது திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 26). கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதியன்று காலை 7 மணியளவில் அவரது வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை
மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அது தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 3 மாதங்கள் நடத்திய தேடுதல் வேட்டையை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அரிபாபு (22).
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அருண்ராஜ் (வயது 24) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மனோஜ்குமாரின் இருசக்கர வாகனம் உட்பட 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அரிபாபு மீது வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆர்.கே. நகர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் அருண்ராஜ் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அரிபாபு மற்றும் அருண்ராஜ் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.