‘‘புத்தாண்டு அன்று இரவு மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக பைக் ரேஸ் நடத்தி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும்’’ என்று சென்னை வடக்கு மண்டல போலீஸ் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பாக பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:– ‘‘டிசம்பர், ஜனவரி மாதங்களில் கிறித்துமஸ் தொடங்கி புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. அந்த சமயத்தில் இளைஞர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு கேளிக்கைகளில் பங்கேற்கின்றனர். குறிப்பாக புத்தாண்டு இரவு அன்று இளைஞர்கள் மது அருந்தி விட்டு பைக்குகளில் வேகமாக செல்கின்றனர். பைக்ரேசிங் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இது உடல் மற்றும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத செயல். இந்த திருவிழா காலத்தை இளைஞர்கள் மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபடியே கொண்டாடுங்கள். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவதை தவறாமல் கடைபிடிக்க தவறாதீர்கள்’’ என தெரிவித்துள்ளார்.