மனு ஸ்மிருதி நூலில் இடம் பெற்றிருந்த பெண்கள் குறித்த கருத்தை மேற்கோள் காட்டி பேசிய திருமாவளவனுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இணையக் கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனு ஸ்மிருதி நூலில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிட்டு இருந்தார்.
நூலில் உள்ள கருத்துகளை அவர் குறிப்பிட்டு பேசிய போதும், திருமாவளவே கருத்து தெரிவித்தது போல், அவரது பேச்சுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்களை திருமாவளவன் அவமதித்துவிட்டதாகக்கூறி குற்றம்சாட்டினர்.
அத்துடன், திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசியல் லாபத்துக்காக இந்துக்களை அவமதித்ததுடன், நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் திருமாவளவன் பேசியதாக, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று (நவ. 9) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, “மனு ஸ்மிருதி என்பது சட்டப்புத்தகம் அல்ல. அதன் மொழிபெயர்ப்பு என்பது சரியா தவறா என்பது கூட தெரியவில்லை. அதே நேரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடக்க வேண்டும். அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நீதிமன்றத்தை நாடக்கூடாது” என்றனர்.
எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்க மனுதாரர் தரப்பில் கேட்ட அவகாசத்தை வழங்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவாக புதிய மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.
இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக்கொண்டு, வாபஸ் பெற்றதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.