சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, திமுக தலைவர் ஸ்டாலின், கொட்டும் மழையில் போய் ஆய்வு செய்தார்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.
நிவர் புயல் இன்று இரவு கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னை முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் சாலைகள் மழை நீரில் மூழ்கிக்கிடக்க, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடசென்னை பகுதியில் மழை மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். கொட்டும் மழையில் ரெயின்கோட், தொப்பி, மாஸ்க் அணிந்தபடி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை பெரம்பூர் சாலை பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் நடந்து சென்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவருடன் எம்.எல்.ஏ சேகர்பாபு, ஸ்டாலின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் சென்றனர்.
அதேபோல், கொளத்தூர் பகுதியில் கிரிஜா நகர், அம்பேத்கர் நகர்; வில்லிவாக்கம் பகுதிகளை ஸ்டாலின் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வை, பிரெட் போன்ற நிவாரண உதவிகளை வழங்கினார்.