சென்னை நுங்கம்பாக்கத்தில் ரோட்டில் நடந்து சென்றவரிடம் பைக்கில் வந்த நபர்கள் செல்போனை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, நெசப்பாக்கம், ஜெஜெ நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 30). ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சூப்பர்வைசராக உள்ளார். இன்று காலை 6 மணியளவில் நெசப்பாக்கத்தில் இருந்து மாநகர பஸ்சில் வேலைக்குப் புறப்பட்டார். நுங்கம்பாக்கம் காலேஜ் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவர் செல்போனை காதில் வைத்தபடி பேசிக் கொண்டே நடந்து சென்றார். மூர்ஸ் சாலை. காலேஜ் ரோடு சந்திப்பில் வந்த போது பின்னால் டியோ வாகனத்தில் வந்த மர்ம நபர் நடராஜனின் செல்போனை பிடுங்கிக் கொண்டு தப்பியோடி விட்டார். இது தொடர்பாக அவர் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.