விஜய் மக்கள் இயக்க மாநில தலைவரிடம் போலீஸ் விசாரணை: திருச்சியில் பரபரப்பு

விஜய் மக்கள் இயக்க கட்சி மாநிலத்தலைவர் மனைவி மற்றும் உறவினர்களிடம், திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தியது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்த அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டவர் பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா. திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆர்.கே.ராஜா, நடிகர் விஜய்யின் பெயரை தவறாக பயன்படுத்துவதாக, திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், கடந்த வாரம் திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.

இதனிடையே ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஆர்.கே.ராஜா தன்னை ஏமாற்றி விட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரவி சங்கர் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆர்.கே.ராஜாவை விசாரணைக்கு அழைத்து செல்ல காவல் துறையினர் அவர் வீட்டிற்கு சென்றனர்.

வீட்டில் அவர் இல்லாத நிலையில் ராஜாவின் மனைவி, மாமனார் மற்றும் மைத்துனர் ஆகிய மூவரையும் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரனைக்கு அழைத்து சென்று மாநகர குற்றபிரிவு காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து, ஆர்.கே ராஜாவின் வழக்கறிஞர் கிஷோர் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2014ம் ஆண்டு இடம் தொடர்பான பிரச்சினையை தற்போது கையில் எடுத்து ஆர்.கே ராஜாவின் மனைவி,மாமனார், மைத்துனரை காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை செய்வதை ஏற்க முடியாது.

நடக்கும் பிரச்சினைகள் விஜய்க்கு தெரியாது என்று எண்ணுகிறோம். விஜய் இதில் தலையிட்டு மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகளை அழைத்து பேசி பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

இந்த பிரச்சினைக்கும் விஜய்க்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை – ஆனால் விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தான் பிரச்சினைகளுக்கு காரணம். அவர் தான் நிர்வாகிகளை அழைத்து இது போன்ற புகார்களை கொடுக்க வலியுறுத்துவதாக கூறினார்.

விஜய் தந்தை கட்சி தொடங்கிய நாள் முதலே பிரச்னைகள் இருந்து வரும் நிலையில் தற்போது அந்தகட்சி தலைவரின் குடும்பத்தினரை காவல் துறையினர் அழைத்து விசாரணை செய்து வருவது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுபுறம், புஸ்ஸி ஆனந்தால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லாத நிலையில் புஸ்ஸி ஆனந்தின் அழுத்தத்தால் காவல் துறையினர் தன்னை தேடி வருவதாகவும், ஆர்.கே.ராஜா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!