பாஜகவின் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில், எப்படி யாத்திரை செல்லலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக வேல் யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கொரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இதற்கு அனுமதி தரவில்லை. எனினும் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற போது, பாஜக தமிழகத் தலைவர் முருகன் மற்றும் அக்கட்சியினர் சிலர், திருத்தணியில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பா.ஜ.கவின் வேல் யாத்திரையை தடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் நாகராஜன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் டி.ஜி.பி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்து வாதிட்டார். அவர் தனது வாதத்தில், வேல் யாத்திரையில் கலந்து கொண்ட்வர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. முகக்கவசம் அணியவில்லை. பா.ஜ.க தலைவர் முருகனே, முறையாக முகக்கவசம் அணியவில்லை. அத்துடன், பாஜகவின் வேல் யாத்திரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்கள் சிரமத்திற்குள்ளானார்கள் என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது. மூன்று நாட்களாக கட்சி தலைவர்கள் கூடியுள்ளனர் எனக்கூறிய நீதிபதி, வேல் என்பது ஆயுதம். ஆயுதச்சட்டப்படி, அது தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை சுட்டிக்காட்டினர்.
ஆனால், பாஜக தரப்பிலோ, தங்கள் தலைவர் வைத்திருந்தது மரத்தால் ஆன வேல் என்று விளக்கம் தந்தது. மேலும், யாத்திர நடத்த தங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.