மருத்துவக் கல்வியில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் 7.5சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி, திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், தாளாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதேபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளையும் இணைத்து அந்த மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில், திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி தாளாளர்கள், செயலாளர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அனைத்து அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி பிரிவை தொடங்க அனுமதிக்க வேண்டும், ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை ஏற்கனவே உள்ள 57 வயது என மாற்றி அமைக்க வேண்டும், உயர்கல்வி பயிலும் அனைவருக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அரசுக்கும், பள்ளி கல்வித்துறைக்கும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.