உள்ளரங்கு வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சிறையில் உள்ள ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, 2018ம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் உள்ளார்.
தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அப்போது மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்ததால், அப்போது வழக்கு முடிக்கப்பட்டது.
எனினும், அண்மையில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கை மீண்டும் விசாரித்தது. அதன் பேரில், அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த வாரம் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி, கைதான மற்ற இருவரான பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ் ஷிண்டே,எம்எஸ் கர்னிக் அமர்வு அர்னாப் மனு மீது இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “அர்னாப் கோஸாமி வழக்கில் உயர்நீதிமன்றம் அதன் அசாதாரண அதிகாரங்களை பயன்படுத்த வேண்டியதில்லை. இந்த வழக்கில் வழக்கமான ஜாமீனை பெற கூடுதல் நீதிமன்றத்தையே அணுகலாம்” என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து, அர்னாப் கோஸ்வாமி தரப்பில், அலிபாக் கூடுதல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே, போலீஸாருக்குத் தெரியாமல் சிலர் உதவியுடன் மூலம் மொபைல் போன் பெற்று அர்னாப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, ராய்காட் மாவட்டம் தலோஜா சிறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.