தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை இன்றும் 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது; இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவது, பொதுமக்களுக்கு சற்று நம்பிக்கை அளிக்கும் செய்தியாக உள்ளது.
அவ்வகையில், குறைந்து வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை இன்று 4வது நாளாக 3 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,516 ஆகும்.
இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,16,751 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 688 பேர் உட்பட இதுவரை 1,97,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தொடர்ந்து அதிகபட்சமாக இன்று கோவையில் 218 பேருக்கும், செங்கல்பட்டில் 150 பேர் இருக்கும், சேலத்தில் 147 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்க் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,018 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரேநாளில் 3,859 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.