பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக பயிற்சிக்கு வந்த பெண் ஒருவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கெபிராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. கெபிராஜ் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டார். மேலும், கெபிராஜை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று சோதனை நடத்திய போலீசார், அங்கு லேப்டாப், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
மேலும், கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணையும் போலீசார் வெளியிட்டார்கள். புகார் கொடுப்பவர்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேலும் ஒரு பெண் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பெண்ணும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் கெபிராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண் வெளிநாட்டில் இருப்பதால், வீடியோ மூலமாக வாக்குமூலம் பெற சிபிசிஐடி போலீசார் திட்டமிடுள்ளனர்.