கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இளங்கலை மருத்துவப்படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. அவரது முடிவு தாமதமாகி வரும் சூழலில், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர், இன்று ஆளுநரை சந்தித்து விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மறுபக்கம், அண்மையில் நடந்த நீட் தேர்வு முடிவு வெளியீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. மேலும் நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை மீது சென்னை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, விடைத்தாளில் விடைகள் மாறியுள்ளதாகவும், பூஜ்ஜியம் என மதிப்பெண்கள் வந்திருப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், இந்த இரு விவகாரங்கள் குறித்து தனது டிவிட்டர் பதிவு வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவில், “தேர்விலேயே ஆள் மாறாட்டம், முடிவுகளில் முழுக் குழப்பம். இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு, உள் ஒதுக்கீடும் துறப்பு. கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.