குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கு, தமிழில் வழியில் படித்து எழுதுவோருக்கு 20% இடஒதுக்கீடு என்ற நடைமுறை உள்ளது. ஆனால், பலர் இடஒதுக்கீட்டை முறைகேடான வழியில் பெறுவதாகக்கூறி, மதுரையை சேர்ந்த சக்திராவ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டனர்.

மேலும், தமிழ் வழியில் படித்தவர்கள் பள்ளியில் இருந்தே தமிழ் வழி பயின்றவர்களா? பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டனர்.

தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்கக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Translate »
error: Content is protected !!