கோவை காட்டூர் காவல் நிலையத்தில் இப்படி ஒரு உதவி ஆய்வாளர்.. வைரல் வீடியோ..!

கோவிட் 19 – கட்டுப்பாடு காரணமாக உணவுக் கடைகள் 11 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன், பார்சல் வசதிகளுடன் நடத்தலாம் என உள்ள நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கடை ஒன்றினை 10 மணிக்கு ரோந்து வந்த காவல் அலுவலர் கடையை அடையுங்கள், என்று கூற அரைவாசிக் கதவை மூடியபடி பார்சல் தருவதற்காக கடைக்காரர் இருந்துள்ளார்.

அப்போது ஓசூர் செல்வதாக இருந்த 5 பெண்மணிகள் அவசர அவசரமாக ஓடி வந்து சில நிமிடங்களில், அமர்ந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறோம் என்று கேட்க, பெண்கள் என்பதால் கடைக்காரரும் அனுமதித்திருக்கிறார். அப்போது அங்கே வந்த முத்து எனும் உதவி ஆய்வாளர், கடைக்குள் புகுந்து தடி, கம்பி எனக் கைக்குக் கிடைத்ததை வைத்து அனைவரையும் தாக்கியதுடன் கடையையும் சேதப்படுத்தியிருக்கிறார்.

கோவிட் 19 என்பது என்ன என்பது பற்றி முதல் அலையிலேயே மக்களிடையே புரிதல் ஏற்பட்டுள்ள நிலையில் அன்று முரட்டுத்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினர் சிலருக்கு இரண்டாம் அலை தொடங்கும்போதும் கடந்த காலங்களில் இருந்து கற்றுக் கொண்ட தன்மை இல்லை அல்லது தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை இது போன்ற நேரங்களில் சிறு கடைக்காரர்கள், வணிகர்கள், எளிய மக்களிடம் காண்பிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

மிக அனுபவம் வாய்ந்த, திறன் வாய்ந்த காவல்துறைத் தலைமைகள் நிர்வகிக்கும் தமிழ்நாட்டில் முத்து போன்றவர்களின் செயல் பாலில் ஒரு சொட்டு நஞ்சு கலந்தது போல ஆகிவிடும். சாத்தான்குளம் சம்பவத்தை இன்னும் யாரும் மறந்துவிடவில்லை. இரண்டாம் அலை கோவிட்டைக் கையாள காவல்துறை தலைமை அலுவலர்கள், களத்தில் இருக்கும் காவல்துறையினருக்கு இப்போதே தகுந்த அறிவுரையும், வழிகாட்டுதல்களையும் அளிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கிடையில் முத்து கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

Translate »
error: Content is protected !!