திருச்சியில், சாக்லேட் வாங்கித் தந்து சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காதலன் கைது செய்யப்பட்டான்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 7ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததில், அச்சிறுமி 3 மாத கர்ப்பமாக இருந்ததை கண்டு, டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அச்சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், தந்தை காலமாகி இரண்டு ஆண்டுகள் ஆனதும் தெரிய வந்தது. திருச்சி தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு முடித்துவிட்டு, படிப்பை மேலே தொடராமல் அந்த சிறுமி வீட்டில் இருந்துள்ளார்.
இதற்கிடையே, 11ம் வகுப்பு படித்தபோது சக மாணவர் ஒருவனுடன், அந்த சிறுமிக்கு நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. சில மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தந்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலாத்காரம் செய்துள்ளார். எனவே அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.
எனினும், சிறுமி சொன்ன நபரை தேடியபோது சிக்கவிலை; மொபைல் எண்களும் பயன்பாட்டில் இல்லை. காதலனை காட்டிக் கொடுக்கக்கூடாது என்பதற்காக அந்த சிறுமி இல்லாத நபர்களின் பெயரை சொன்னது தெரிய வந்தது.
மீண்டும் அந்த சிறுமியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, தன்னுடன் 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு பாதியில் படிப்பை நிறுத்திய மாணவன் தான் காரணம் என்று தெரிய வந்தது. ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலனை போலீசார் கைது செய்தனர்.