சென்னை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை தொடர்வதால், அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை நிரூபிப்பது போல் சென்னை நகரில் இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.
சென்னை நகரில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அண்ணா நகர், தியாகராய நகர், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, பெரும் அவதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல் சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், அலுவலகம் செல்வோர், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.