சென்னை தேனாம்பேட்டையில் செல்போன் கொள்ளையர்கள் 3 பேர் கைது: 13 மொபைல்கள் பறிமுதல்

சென்னை தேனாம்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை, தி.நகர், திருமலை பிள்ளை தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரிஷ் (வயது 22). கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதியன்று மாலை பணி முடிந்து அங்குள்ள, வித்யோதயா பள்ளி, திருமலைப்பிள்ளை சந்தில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஹரிஷின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதேபோல் ஆயிரம் விளக்கு, அசிஸ் முல்க் தெருவைச் சேர்ந்த சரிதா (வயது 25) என்பவர் தேனாம்பேட்டை, ஜிஎன் செட்டி பாலம் அருகில் செல்போனில் பேசியபடி சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சரிதாவின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக ஹரிஷ் மற்றும் சரிதா ஆகிய இருவரும் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் செல்போன் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலங்கியது. மேலும் திநகர் சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் கொள்ளையர்களின் செல்போனின் ஐஎம்இஐ தேனாம்பேட்டையில் தொடர் சங்கிலிக் கொள்ளையில் ஈடுபட்ட ராயப்பேட்டை, சைவமுத்தையா முதலி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 19), தினேஷ் என்கிற வெண்டைக்காய் தினேஷ் (21), மணி (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!