செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்த நிலையில், திறக்கப்படும் நீரின் அளவு 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது; இதனால் அடையாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நெருங்கியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது; இதனால் அடையாறில் வெள்ளம் ஏற்பட்டு சென்னை நகரில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 1000 கன அடி நீரை பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர். 19 மதகுகளில் 7 மதகுகள் திறக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் வினாடிக்கு 5000 கன அடியாக இது அதிகரிக்கப்பட்டது.
செம்பரம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதாலும், 4000ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், கானு நகர், சூளைப்பள்ளம், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கும், பாதுகாப்பான பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இன்று பகலில் செம்பரம்பாக்க ஏரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.
சுமார் 6000 கன அடி நீர் அடையாற்றின் வழியாக வெளியேறவுள்ளது. அடையாறு 60,000 கன அடி நீர் செல்லக்கூடிய அளவுக்கு அகலம் கொண்டது என்பதால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.