தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பாரதிய ஜனதா கட்சி, தமிழை தேசிய மொழியாக்குவதற்கு கோரிக்கை வைக்குமா என்று, திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் பரபரபாகி வருகிறது. அதிமுக – திமுக கட்சிகள் தேர்தல் வியூகங்களை அமைத்து வரும் சூழலில் பாரதிய ஜனதா கட்சியோ, வேல் யாத்திரை என்ற பெயரில் வாக்குகளை கவரலாம் என்று திட்டமிட்டுள்ளது.
இதற்காக, தமிழகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் வரும் 6ம் தேதி திருத்தணியில் தொடங்கும் இந்த யாத்திரை, டிசம்பர் 6ம் தேதி நிறைவடைகிறது.
இந்த யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று கூறி, எதிர்க்கட்சிகள் இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அத்துடன், பாஜகவின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இச்சூழலில், வேல் யாத்திரை மேற்கொள்ளும் பாஜகவுக்கு திமுக எம்.பி. கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?” என்று பதிவிட்டுள்ளார்.